நடிகை சித்ரா மரணத்தில் நடந்தது என்ன?

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ்-விஜயாவின் மூன்றாவது மகள் சித்ரா. 29 வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடித்து வந்தார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா நடித்து வந்த தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்பு பெங்களூர்- பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

இதனால் கடந்த 4-ம் தேதி முதல் பெங்களூர் – பைபாஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் அறை எண் 113-ல் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் தங்கி இருந்துள்ளார்.

ஒன்பதாம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் படபிடிப்பு முடித்து ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா ஹேம்நாத்திடம் தான் குளிக்க செல்வதாகவும் அதனால் வெளியே செல்லுமாறும் கூறியுள்ளார். இதனிடையே வெகுநேரமாகியும் சித்ரா வெளியே வராததால், ஹேம்நாத் ஹோட்டல் ஊழியரிடம் மாற்று சாவி எடுத்து வரச்சொல்லி கதவை திறந்து பார்த்ததில், சித்ரா அறையில் உள்ள மின் விசிறியில் புடவை மூலம் தனக்கு தானே தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹேம்நாத் ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் சித்ராவின் உடலை கீழே இறக்கி, நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தனது மகள் தூக்கு மாட்டி இறக்கக்கூடிய நபர் இல்லை என்றும், மிக தைரியமானவர் என்றும் சித்ராவின் பெற்றோர் கூறுகின்றனர். மேலும் சித்ராவின் உடலில் கன்னத்திலும், தடையிலும் அடிபட்டு ரத்த காயங்கள் இருப்பதால் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறையில் தங்கியிருந்த ஹேம்நாத்திடமும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். மேலும் முழுமையான பிரேத பரிசோதனைக்கு பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.

Exit mobile version