நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தி நில சர்ச்சை குறித்து விசாரித்து வந்தஅலகாபாத் உயர்நீதிமன்றம் பாபர் மசூதி உள்ள இடத்தில் உண்மையிலேயே கோவில் இருந்ததா? – என்று ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வகமான ஏ.எஸ்.ஐ.க்கு கடந்த 2002ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதனையடுத்து அங்கு ஏ.எஸ்.ஐ. குழுவினர் தொல்லியல் ஆய்வுகளைத் தொடங்கினர். இந்தக் குழு தனது தொல்லியல் ஆய்வின் முடிவுகளை 2003ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த முடிவுகள் அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடம் முன்னர் ராமர் கோவில் இருந்த இடம்தான் என்றே கூறின.தங்களது ஆய்வில் இந்திய தொல்லியல் துறை கூறிய சில முக்கிய தகவல்கள்:
சர்ச்சைக்குரிய நிலத்தில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டபோது, அந்த இடம் கி.மு.2ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அரசுகளின் கைமாறிய பகுதியாக உள்ளது. அது மனிதர்கள் வாழும் சாதாரண உறைவிடப்பகுதியாக ஒருபோதும் இருந்ததே இல்லை.
கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய இடத்தில் சிவலிங்க வடிவிலான வட்டச் செங்கல் கோவில் ஒன்று இருந்துள்ளது. அதன் மிச்சங்களை இப்போதும் காண முடிகின்றது. அந்தக் கோவிலின் நீர் வெளியேறும் துவாரம் இன்னும் அப்படியே உள்ளது.
கி.பி.10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் வட்டச் செங்கல் கோவில் அழிக்கப்பட்டது. கி.பி.12ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தில் 3 நிலைகளை உடைய பெரிய கோவில் ஒன்றும் கட்டப்பட்டு உள்ளது. 50 தூண்களைக் கொண்ட இந்தக் கோவில், வடக்கு தெற்கில் குறைந்தது 50 மீட்டர் நீளத்தையும், கிழக்கு மேற்கில் 30 மீட்டர் அகலத்தையும் கொண்டிருந்தது.கி.பி.12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இடித்தே 16ஆம் நூற்றாண்டில் பாபரின் மசூதி கட்டப்பட்டு உள்ளது.
தற்போது பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இன்னொரு கட்டுமானம் இருந்தது தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாபர் மசூதிக்கு எனத் தனிப்பட்ட அஸ்திவாரமே இல்லை. அது ஏற்கனவே இருந்த ஒரு கட்டுமானத்தின் அஸ்திவாரத்தில்தான் இப்போதும் நிற்கின்றது. ஆனால் அது எந்த கோவில் என்பதை குறிப்பிடப்படவில்லை.
பாபர் மசூதியின் உள்ளே உள்ள 12 தூண்களில் கோவிலின் மிச்சங்கள் இப்போதும் காணப்படுகின்றன – இவ்வாறு இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வு முடிவுகள் கூறின.
இந்த ஆய்வு முடிவுகளை அலகாபாத் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்த ஆய்வின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டே அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் ராமர் கோவில் இருந்த இடம்தான் என்ற முடிவிற்கு அலகாபாத் நீதிமன்றம் வந்தது.
சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற விசாரணையின் போதும் ஏ.எஸ்.ஐ.யின் அந்த ஆய்வு முடிவுகள் இந்து அமைப்புகளின் தரப்பில் முக்கிய ஆதாரமாக மேற்கோள்காட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.