மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் செய்தது என்ன?

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று கடந்த 5ம் தேதி இரவு தமிழக மக்கள் மின் விளக்குகளை அனைத்து அகல் விளக்குகளை ஏற்றிய தருணத்தில், மின்விநியோகத்தில் எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் கவனித்துக் கொண்டதில், தமிழக மின்சார வாரியம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதனைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி கடந்த 5ம் தேதி இரவு 9 மணி தொடங்கி அடுத்த 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, அகல் விளக்குகள் ஏற்றியும், செல்போன் டார்ச் லைட்களை ஒளிரச் செய்தும் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 9 நிமிடங்கள் நீடித்த அந்த நிகழ்வு காரணமாக, மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க மின்சார துறை  மிகவும் சாமர்த்தியமாக செயலாற்றியுள்ளது.
 
வழக்கமாக இரவு 9 மணி நிலவரப்படி 10 ஆயிரத்து 400 மெகாவாட் மின்சாரம் முதல் 10 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் வரை பயன்பாட்டில் இருக்க வேண்டும். இந்த ஒன்பது நிமிடங்களுக்கு பிரதமர் அறிவித்தபடி விளக்குகளை மட்டும் அணைக்காமல், பிற மின் சாதனங்களை மக்கள் ஒருவேளை நிறுத்தினால், எவ்வளவு மின்சாரம் குறையும் என்பதையும் அதிகாரிகள் கணக்கிட்டனர். அதனை சமாளிக்கும் விதமாக, சுமார் 2,500 மெகாவாட் மின்சாரத்தை அந்த சமயத்தில் மின்வாரிய அதிகாரிகள் குறைத்துள்ளனர். மேலும் மத்திய அரசு அறிவித்த படி அனைத்து வீடுகளிலும் உள்ள விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும் எனவும், மற்ற மின் சாதன பொருட்களின் இயக்கங்களை நிறுத்த வேண்டாம் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் முன்னதாகவே விளம்பரங்களும், அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டன. அதனை பெரும்பாலான மக்கள் பின்பற்றியதாகவும் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார துறையும், தமிழக அரசும் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது போல் தங்கள் ஒற்றுமையை கடந்த 5ம் தேதி இரவு வெளிப்படுத்தினர். அதே நேரம், மின் விளக்குகள் அணைக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, உரிய நடவடிக்கைகளை தமிழக மின்வாரியம் செய்த காரணத்தால், மின்சார விநியோகத்தில் அன்று எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Exit mobile version