ஸ்டாலினிக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு, விவசாயிகளை குழந்தைகளைப் போல் பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 260ஆவது பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோரும் கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, வில்லிசேரியில் பருத்தி விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பின்னர் உரையாற்றிய முதலமைச்சர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார். மக்காச்சோளப் பயிரில் ஏற்பட்ட அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுக்க, அரசே 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருந்து தெளித்து விவசாயிகளைப் பாதுகாத்ததாக கூறினார்.
விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகளோடு இருப்பதால், அதற்கேற்றாற்போல் ஸ்டாலின் நடந்து கொள்வதாகவும் விமர்சித்தார்.