தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்துவருகின்றது. இதன் காரணங்கள் என்னென்ன? எப்போது குறையும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்….
சந்தையின் தேவையே தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றது என்று சொல்லப்பட்டாலும், அதனைத் தவிரவும் வேறுபல காரணிகள் தங்கத்தின் விலை உயர்விற்கு காரணங்களாக உள்ளன. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகில் சில நாடுகளில் உள்ள அசாதாரணமான அரசியல் சூழல்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
தங்கத்தை உலகின் அனைத்து நாடுகளும் பயன்படுத்தினாலும், தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கை வகிக்கும் நாடுகளாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளே உள்ளன. எனவே, இந்த இரு நாடுகளின் சூழல்கள் மாறும் போது, தங்கத்தின் விலையும் மாற்றம் அடையும்.
சில நாட்கள் முன்பு, அமெரிக்க வங்கிகள் டெபாசிட்களுக்கு வட்டியைக் குறைக்க உள்ளன என்ற தகவல் வந்தது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால்தான், 2019ஆம் ஆண்டின் இறுதியில் சில நாட்களாக தங்கத்தின் விலையில் சற்று ஏற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், ஈரான் நாட்டு இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இதற்கு ஈரானின் எதிர்வினை கடுமையாக இருக்கும் என அஞ்சப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டு மக்கள் பங்குச் சந்தைகள் மற்றும் உட்கட்டமைப்புகள், தற்போது முதலீடுகளுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று கருதுகின்றனர். இதனால், உடனே தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கமாக திருப்பியும் வருகின்றனர்.
இதனால், தங்கத்தின் விலை தற்போது மிக அதிக வேகத்தில் உயர்ந்து வருகின்றது. மேலும், இந்தப் பதற்றம் குறையும்வரை தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது புத்தாண்டு உரையில், அமெரிக்காவுக்கு எதிராகப் பேசியதோடு, அணு ஆயுத சோதனைகள் தொடரும் என்றும் அறிவித்து உள்ளார். வட கொரியா உடனான அமெரிக்க உறவில் மேலும் ஏதாவது விரிசல் ஏற்பட்டால், அதுவும் தங்கம் விலையை பாதிக்கும்.
அது போலவே, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேறும் போது, அங்கு ஏற்படும் மாற்றங்களும் தங்க விலையை பாதிக்கும். எனவே, இந்த 2020ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை அடிக்கடி மாற்றங்களையும், வரலாறு காணாத உயரங்களையும் அடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.