காஷ்மீர் மாநிலம் பெற்றுள்ள சிறப்பு தகுதிகள் என்னென்ன?

1954 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியப் பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உத்தரவின் படி, 35ஏ சட்டப்பிரிவானது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் அரசியல் சாசன விதி 370 உடன் சேர்க்கப்பட்டது.

இந்த 35ஏ சட்டப் பிரிவானது, மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஜம்மு- காஷ்மீர் மாநில அரசுக்கே வழங்குகிறது. மேலும், சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காத வகையில், அம்மாநில சட்டப்பேரவை எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளவும் இந்த சட்டப் பிரிவு அனுமதி வழங்குகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டவிதி 368ன் படி, நாடாளுமன்றம் மட்டுமே சட்டங்களை இயற்றும் அமைப்பாக உள்ளது. அந்தச் சட்டங்களையும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்ற முடியும். ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்தச் சட்டப் பிரிவானது, நாடாளுமன்றம் செல்லாமல் குடியரசுத்தலைவர் அனுமதியை மட்டுமே கொண்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அரசியல் சாசன விதி 370 என்பது, சட்டத் திருத்தங்களுக்கான விதி ஆகும். அதைக் கொண்டு புதிய சட்டம் ஒன்றையே எழுதியது சரியா? என்ற கேள்வியும் இதனால் கேட்கப்படுகிறது. இது கொண்டு வரப்பட்ட முறை சரியா? என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இப்போதும் நிலுவையில் உள்ளது.

இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே அதிக அளவிலான மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய நாடாளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து, மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடி உண்டு. ஆயினும் இந்தக் கொடி, இந்திய தேசியக் கொடியுடன் சேர்த்தே ஏற்றப்படவேண்டும். இந்த மாநிலம் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும். இம்மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனம் உண்டு. அம்மாநில ஆளுநரை நியமிக்கும் பொழுது, அம்மாநில முதல்வருடன் ஆலோசித்தப் பின்னரே நியமிக்க வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இங்கு அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அரசு வேலைகளில், வேறு மாநில மக்கள் சேர முடியாது. இங்குள்ள கல்லூரிகளில் வேறு மாநில மக்கள் ஸ்காலர்ஷிப் பெற முடியாது. இதை மத்திய அரசு நீக்கவும் முடியாது.

ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள், மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள். ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தால், அவர்கள் நிலம் வாங்க முடியும்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அத்தோடு இந்திய அரசியல் சாசனத்தின் 238-வது விதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.

ஜம்மு காஷ்மீர் சிறப்புத் தகுதி சட்டத்திற்கு, காஷ்மீர் பிரிவினைவாதிகளின் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது. இந்த சட்டம் நீக்கப்பட்டால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீரில், பிறர் அதிகம் குடியேற வாய்ப்பு ஏற்படும் என அவர்கள் எண்ணுகிறார்கள்.

மேலும், சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், இந்தியாவின் இறையாண்மையை காப்பதிலும் சிக்கல் உள்ளதாக மத்திய அரசு நினைக்கிறது. இதனால் சிறப்புத் தகுதியை நீக்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version