பாலியல் வழக்கில் கைதாகி உள்ள முகிலன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? அவரது பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
சமூக செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், சுற்று சூழல் ஆர்வலர் என்று சக தோழர்களால் அழைக்கப்பட்டவர் முகிலன். காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கண்டு பொறுக்க முடியாமல் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்று கூறிக்கொண்டு தன்னைத்தானே போராளி என்று கூறியதுதான்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மதுரைக்கு செல்வதாக கூறி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற முகிலன் திடீரென யாருக்கும் தெரியாமல் மாயமானார்.பல போராட்டங்களை முன்னெடுத்த முகிலனை அரசு ஏதோ செய்துவிட்டது என்றும், அவர் எதிர்த்த நிறுவனங்கள் ஏதோ அவரை கடத்தி கொண்டுபோய் விட்டன என்றும் பரவலாக ஒரு வதந்தி பரவின. இதற்காக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் முகிலனை கண்டுபிடித்து தரும்படி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. சமூக வலைத்தளங்களில் முகிலன் எங்கே என்ற ஹாஷ்டேகும் பிரபலம் ஆனது.
உண்மையில் முகிலன் போராளியா? அல்லது போராளி என்ற பெயரில் இருக்கும் ஒரு காமுகனா என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
காரணம்… கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.அந்த புகாரின் முதல் தகவல் அறிக்கை நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக கிடைத்தது. முகிலனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண், முகிலன் மீது முதல் தகவல் அறிக்கையில் கொடுத்திருக்கும் புகாரை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். அதில் சிலவற்றை மட்டும் கூறுகிறோம்.
1. அண்ணா என்று ஆசையாக அழைத்த தன்னை, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான் முகிலன்
2. தன்னுடைய திருமண வாழ்வில் நிம்மதி இல்லை, அதனால் என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி என்னிடம் பலமுறை பாலியல் அத்துமீறினான்.
3. முகிலனுக்கு என்னை போன்று பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.
4. எங்கள் உறவை பற்றி தெரிந்த ஒரு பெண்ணை தீர்த்து கட்டிவிடுகிறேன் என்றும் என்னிடம் கூறினார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டுள்ளது.
முகிலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது மேலும் தன்னையும் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்ட நான் அவருடைய முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நான் கரூரில் காத்திருந்தேன். அன்று தான் மதுரை செல்வதாக கூறி மாயமானார் முகிலன் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார் அந்த பெண்.
இந்த புகார் தொடர்பாக முகிலன் மீது ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் பலாத்கார புகார் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதமே மாற்றப்பட்டது. இது தொடர்பாக கரூரில் உள்ள சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் மூன்று காவலர்கள் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனை, தமிழக காவல்துறையிடம் ஆந்திர காவல்துறையினர் ஒப்படைத்தனர்.முகிலன் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பிவருகின்றனர்.
கவிஞர் தாமரை உட்பட சமூகவலைத்தளங்களில் முகிலனுடன் பயணித்தவர்களும் முகிலனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
140 நாட்களாக எங்கே இருந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை காவல்துறையினர் முகிலனிடம் கேட்டுள்ளனர். முழுமையான விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் முகிலன் கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை 8 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக முகிலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.சமூகத்திற்காக போராடுகிறேன் என்ற பெயரில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முகிலனுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்…எது எப்படி இருந்தாலும் உண்மை நிச்சயம் வெளிவரும் என்பதை எதிர்பார்ப்போம்.