விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசு, தற்போது அவற்றுக்கான விதிகளையும் வகுத்து அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு….
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று கடந்த பிப்ரவரி 9-ந் தேதி அறிவித்து இருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பால் விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறை எரிவாயு போன்றவற்றை எடுக்கும் முயற்சிகள், முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் வரவேற்று பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் “காவிரி காப்பாளன்” என்ற பட்டத்தையும் சூட்டினர்.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அதற்கான விதிகளை வகுத்து, தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விளை நிலங்களை வேளாண் பணிகளுக்கு தவிர வேறு எந்தவித பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த வேளாண்மைப் பணிகள் மற்றும் சாகுபடியை அதிகரிப்பதற்காக மட்டும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் எண்ணெய் கிணறுகளுக்கான ஆய்வுப் பணிகள், நிலத்தை பாழாக்கும் ஆலைகளுக்கு அனுமதி உள்ளிட்டவற்றிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள தமிழக அரசு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் திட்டங்களை வகுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் வேறு தொழில்களுக்கு சென்று விட்ட விவசாயிகள், மீண்டும் தங்கள் வேளாண் தொழிலுக்கு திரும்பி வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் காவிரிப் படுகை, இனி காப்புப் படுகையாக மாறி உள்ளது. இதனால் தமிழக விவசாயத்திற்கு பொற்காலம் பிறந்துள்ளது என்றே சொல்லலாம்….