குப்பைகளை எடைக்குப் போட்டு வாழ்க்கை நடத்தி வந்த ஒருவரை, கோடீஸ்வரராக்கி உள்ளது திமிங்கிலத்தின் வாந்தி. தாய்லாந்தில் நடந்த வினோத சம்பவம்.
தாய்லாந்தில் சோங்க்லா பகுதியைச் சேர்ந்தவர் சுராசெட் சஞ்சு. கடலோரப் பகுதிகளில் ஒதுங்கும் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தேடி எடுத்து, அவற்றை எடைக்குப் போட்டு பணம் சம்பாதிப்பதுதான் இவரது வழக்கமான வேலை.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் இருந்த இவரை, இவர் சமீபத்தில் கண்டெடுத்த பொருள் ஒன்று தற்போது கோடீஸ்வரராக்கி உள்ளது. சாமானியரை கோடீஸ்வரனாக்கியது ஆம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கில வாந்தி. வாந்திக்கு விலை உண்டா? – என்கிறீர்களா?. உண்டு, அதுவும் கோடிக் கணக்கில்…
எண்ணெய்த் திமிங்கிலம் என அழைக்கப்படும் ஒருவகைத் திமிங்கிலத்தின் வயிற்றில் ஆம்பர்கிரீஸ் என்ற நறுமணப் பொருள் உருவாவது உண்டு, இதுதான் ஒருகட்டத்தில் வாந்தியாக வெளியேறுகிறது. பூனையிடம் புனுகும் மானிடம் கஸ்தூரியும் உருவாகுவதைப் போன்றதுதான் இதுவும். இந்த ஆம்பர்கிரீஸ்சின் நறுமணம் நீடித்து நிலைக்கக் கூடியது என்பதால் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இதை அதிக விலைக்கு வாங்குகின்றன. இதனால் ஆம்பர் கிரீஸை மிதக்கும் தங்கம் – என்று அழைக்கின்றனர்.
இந்த ஆம்பர்கிரீஸ்தான் சுராசெட் சஞ்சுவுக்குக் கிடைத்து உள்ளது. ஆம்பர்கிரீஸின் சந்தை விலை ஒரு கிலோவிற்கு 13 லட்சமாக உள்ளது. சுராசெட் சஞ்சு கண்டெடுத்த ஆம்பர்கிரீஸின் எடை 16 கிலோ 700 கிராம் என்பதால் இதன் மூலம் அவர் கோடீஸ்வரராகி இருக்கிறார்.
கடலோரமாக குப்பைகளைக் கண்டெடுக்கச் சென்ற ஒருவருக்கு, மிக அரிய பொக்கிஷம் கிடைத்த செய்தியை தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட, இப்போது அது சர்வதேச அளவில் பேசப்படும் செய்தியாக மாறிவிட்டது. ஆனால் சாமானிய மனிதர்களில் பெரும்பாலானோருக்கு ஆம்பர்கிரீஸ் குறித்து தெரியாது என்பதும், இதனால் உலகின் மிக அரிய பொருட்களில் ஒன்றான ஆம்பர்கிரீஸ் பல கடற்கரைகளில் குப்பைகளோடு வெளியேற்றப்படுகிறது என்பதும் வருத்தத்திற்கு உரிய செய்தி.