மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 வது போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களில் சுருட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 2வது லீக் போட்டியில் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் விளையாடின. நாட்டிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது. அதன்படி விளையாடிய பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸாமன் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் அதிக பட்சமாக தலா 22 ரன்கள் எடுத்தனர். 21 புள்ளி 4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் 4 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 106 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 11 ரன்னிலும், டேரன் பிராவோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய கிறிஸ் கெயில் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 13 புள்ளி 4ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

Exit mobile version