இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஹெட்மியர் சதத்தால் மே.தீவு அணி 322 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மியரின் அதிரடியான சதத்தால் மேற்கிந்திய அணி 322 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் புதுமுக வீரராக ரிஷப் பந்தும், மேற்கிந்திய அணியில் சந்தர்பால் ஹேம்ராஜ், தாமஸ் ஆகியோர் அறிமுகமாகினர். இதில், சந்தர்பால் ஹேம்ராஜ் அந்த அணியின் சிறந்த முன்னாள் டெஸ்ட் தடுப்பாட்ட வீரர் சந்தர்பால் மகன் ஆவார்.

இதையடுத்து, மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர்களாக கெய்ரன் பொவல், சந்தர்பால் ஹேம்ராஜ் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ஹேம்ராஜ், முகமது ஷமி வீசிய 4-வது ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷாய் ஹோப், கெய்ரன் பொவலுடன் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடினர்.

பொறுப்பாக ஆடிய கெய்ரன் பொவல் அரை சதம் அடித்தார். இவர்களது ஆட்டம் சீராக சென்ற நிலையில் 15-வது ஓவரை வீசுவதற்கு கலிஸ் அகமதை அழைத்த கேப்டன் விராட் கோலி, அதற்கு பலனளிக்கும் வகையில் கெய்ரன் பொவலும் பந்தை தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது மேற்கிந்திய தீவு அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன் எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய அந்த அணியின் முக்கிய துருப்பு வீரரான சாமுவேல்ஸ் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுக்க மேற்கிந்திய தீவு அணி 25 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்து.

அடுத்ததாக, ஷிம்ரன் ஹெட்மியர் களமிறங்கினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சதத்தை பதிவு செய்தார். மற்றொரு வீரரான ஹோப் 32 ரன்களில் அவுட் ஆனார். அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 38 ரன்கள் குவித்தார்.

இறுதியில் மேற்கிந்திய தீவு அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 குவித்துள்ளது. அதிக பட்சமாக ஷிம்ரன் ஹெட்மியர் 106 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டும், ஜடேஜா-ஷமி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்திய அணி 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Exit mobile version