கோவையில் தங்கநகைகளை திருடிய மேற்கு வங்க இளைஞர் !

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருபவர் பியூஸ். இவரது பட்டறையில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சதாம் உசேன். பியூஸின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொண்ட சதாம் உசேன், வெளிப் பட்டறைகளுக்கு நகைகளை பினிஷிங் செய்யக் கொடுத்து வாங்கி வரும் பணியினை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளிப் பட்டறைகளில் இருந்து வாங்கி வந்த பிரெஸ்லெட், உள்ளிட்ட நகைகளை சதாம் உசேன், பியூஸிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக சதாம் உசேனை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த அவர் சதாம் உசேன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சதாம் உசேன் தனது அறைக்கு வரவில்லை என்று நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சதாம் உசேன் நகைகளைத் திருடி மாயமானதை அறிந்த பியூஸ் இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். சுமார் 621 கிராம் எடையுள்ள 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை சதாம் உசேன் திருடிச் சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சதாம் உசேனின் நண்பர்கள், உறவினர்கள் என விசாரித்தவர்கள் அவரது செல்போன் செயல்பாட்டில் இருப்பதை வைத்து சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது, மேற்கு வங்க மாநிலம், நார்ஜுல் நகர் பகுதிக்குட்பட்ட
கிராமம் ஒன்றில் சதாம் உசேன் பதுங்கி இருப்பதைக் கண்டறிந்த தனிப்படை போலீசார் உடனடியாக விமானத்தில் புறப்பட்டு சென்று, மேற்கு வங்க காவல்துறையினர் உதவியோடு அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்து சதாம் உசேனை கேவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version