மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி அறிக்கை அனுப்பியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளில் ஒருவரான தற்போதைய கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பிறகு அவர்களை விடுவித்தனர்.
இந்தநிலையில் சிபிஐ மூலம் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை மத்திய பா.ஜ.க அரசு கவிழ்க்க முயல்வதாக கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சிபிஐ நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே போராட்டம் நடைபெறும் இடத்திலேயே அவசர அவசரமாக மாநில அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.