மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த 10 ஆம் தேதி கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள், அங்கு பணியாற்றி வந்த 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரியும், மேற்கு வங்கம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 11 ஆம் தேதி முதல் 6 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாபன்னா என்னுமிடத்தில் மருத்துவர் குழு மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும் என மம்தா உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முன்னதாக, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.