ஒன்றரை வயது குழந்தைக்கு டிப்ரமேட்டியா அறுவைச் சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு டிப்ரமேட்டியா எனப்படும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் – கல்பனா தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு தீராத காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் உடல் நலம் குணமடையாததால், சந்தேகமடைந்த அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய குடல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள், இடம் மாறி மார்புப் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

குழந்தைக்கு டிப்ரமேட்டியா எனப்படும் அறுவைச் சிகிச்சை செய்தால் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து, மருத்துவர்கள் குழுவினர், மயக்க மருந்தியல் மருத்துவர் உதவியுடன் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். தற்போது அந்த குழந்தை முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை முடிவுற்று குழந்தை நலமுடன் இருப்பதால் பெற்றோர் தனது குழந்தையுடன் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

Exit mobile version