மருத்துவர்களைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்: மருத்துவர்கள்

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Exit mobile version