காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக புதிய கூட்டணிக்கு தயாராகும் மம்தா!

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக புதிய கூட்டணிக்கு தயாராகி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பலம் மிக்க பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைத்ததன் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு செல்வாக்கு பெருகி வருகிறது.

இதனால், காங்கிரஸ், பாஜகவில் இருந்து விலகும் மூத்தத் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரசை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில், 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக புதிய கூட்டணியை அமைக்க மம்தா பானர்ஜி ஆயத்தமாகி வருகிறார்.

இதற்காக, மாநில கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் மம்தா பானர்ஜி, செவ்வாயன்று சிவசேனா கட்சித் தலைவர்களான ஆதித்யா தாக்ரே, சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, மம்தா சந்தித்து பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது தற்போது கிடையாது என்று கூறினார்.

மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் போட்டியிடும்போது, கோவாவில் திரிணாமூல் காங்கிரஸ் ஏன் போட்டியிடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

 

Exit mobile version