பதவி சுகத்திற்காக மக்கள் பிரச்னைகளை கண்டும் காணாமல் ஆட்சி செய்த ஒரே கட்சி திமுகதான் என அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், தம் மீது எய்யப்பட்ட அம்புகளை தனி ஒரு ஆளாக எதிர்த்து நின்று, எவராலும் தகர்க்க முடியாத எஃகு கோட்டையாக, அதிமுகவை, மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். மத்தியில் அங்கம் வகித்த திமுக, மக்களுக்கு பயன்படக் கூடிய வகையில், தொலைநோக்கு திட்டங்களை வழங்கியது உண்டா எனக் கேள்வி எழுப்பிய துணை முதலமைச்சர், நலத்திட்டம் என்ற சொல் திமுகவின் அகராதிலேயே இல்லை என்று விமர்சித்தார்.
மத்தியில் அங்கம் வகிக்காத அதிமுக, 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிடவைகளை மத்திய அரசிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக துணை முதலமைச்சர் குறிப்பிட்டார். தமிழகத்தில் வீடற்ற 11 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2023ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்
இதனைத் தொடர்ந்து நன்றியுரை ஆற்றிய மின்துறை அமைச்சர் தங்கமணி, 2021ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் என சூளுரைத்தார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், திரளான தொண்டர்களின் உற்சாகத்துடன் பங்கேற்றது அமைச்சரின் வார்த்தைகளை உறுதிபடுத்துவதாக அமைந்தது.