விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில், புதிதாக அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டு விழாவில் முடிவுற்ற திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சாலை வழியாக ராமநாதபுரம் செல்லும் முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் 22 புள்ளி 6 ஏக்கர் பரப்பளவில், 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை, தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இறப்பை கட்டுப்படுத்த, அரசு முனைப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் 3 ஆண்டுகளில், 75 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
பின்பு, அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். சுகாதாரத்துறையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கச்சத்தீவை மீட்க சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டார். அதிமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும், மக்களிடையே பிளவு ஏற்படுத்த யார் முயற்சித்தாலும் முறியடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
அதன் பின்பு, விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் 11 மருத்துவக்கல்லூரிகள் மூலம், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரத்து 100 மாணவர்கள் மருத்தவப்படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.