ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

புதிய திட்டங்களை துவக்கி வைக்க ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமான படை ஹெலிகாப்டர் மூலம் சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மத்திய மாநில அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். சாலையில் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.

நேரு உள்விளையாட்டு அரங்கில், ராணுவத்தின் சார்பாக அளிக்கப்பட்ட மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். பின்னர் சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, அர்ஜுன் எம்.பி.டி. MK-1A ரக கவச வாகனத்தை பிரதமர் பார்வையிட்டார்.

பின்னர், நிகழ்ச்சி மேடைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர், துனை முதலமைச்சர், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, கிருஷ்ணர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.

Exit mobile version