கிருஷ்ணகிரி கத்திரிக்காய்களுக்கு சிங்கப்பூரில் நல்ல வரவேற்பு

கிருஷ்ணகிரி கத்திரிக்காய்களுக்கு சிங்கப்பூரில் வரவேற்பு அதிகரித்துள்ளது.. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பசுமைக் குடில்கள் அமைத்து கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

குறிப்பாக, அவதானப்பட்டி பகுதி விவசாயிகள் பலரும் தற்பொழுது கத்தரிக்காய் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் கத்தரிக்காய்கள் மூன்று விதமாக தரம் பிரிக்கப்பட்டு முதல் ரக கத்தரிக்காய்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கு சாகுபடி செய்யப்படும் கத்தரிக்காய்களை வியாபாரிகளே நேரடியாக நிலத்திற்கு வந்து தரம் பிரித்து ஏற்றுமதி தரம் கொண்ட கத்தரிக்காய்களை எடுத்துச்செல்கின்றனர். இரண்டாம் தர கத்தரிக்காய்கள் உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

முதல் தர கத்தரிக்காய்கள் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், இரண்டாம் ரக கத்தரிக்காய்கள் ஒரு பெட்டிக்கு 250 ரூபாய் வரை விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் கத்தரிக்காய்கள் தரமாகவும், சுவையாகவும் இருப்பதால் கேரளா போன்ற வெளிமாநிலங்களிலும், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், உரிய விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version