அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, துபாய் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் சென்ற முதலமைச்சர், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்பிறகு அமெரிக்கா சென்ற முதலமைச்சர் நியூயார்க் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டங்களில் பங்கேற்று 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 80 கோடி ரூபாய் வரை முதலீடுகள் கிடைத்துள்ளதோடு, 26 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். துபாய் பயணத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.