காதலர் தினத்தையொட்டி ஓசூரில் களைகட்டும் ரோஜா ஏற்றுமதி

காதலர் தினத்தையொட்டி ஒசூரில் விற்பனையாகும் ரோஜா மலர்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரோஜா மலர்களுக்கு அதிக விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காதலர் தினத்தில் தனது காதலருக்கு அன்புப் பரிசாக ரோஜா மலர் வழங்கப்படுகிறது. வரும் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதால் ரோஜா விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒசூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரோஜா மலர்களுக்கு  நல்ல வரவேற்பு உள்ளது. ஒசூர், தளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவுவதால் ரோஜா மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் 2000 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவில், பசுமைகுடில்கள் மூலம் பல வகை ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் ரோஜா மலர்கள் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்பட்டாலும், காதலர் தினத்தின்போது மட்டுமே மிக அதிக அளவிலான ஆர்டர்கள் குவிந்துவருவதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சிகப்பு வண்ண ரோஜா மலர் காதலின் குறியீடாக இருப்பதால், காதலர் தினத்தையொட்டி, சந்தையில் அதற்கான தேவை அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே, ஒசூர் பகுதி விவசாயிகள் பிப்ரவரி மாதத்தை குறிவைத்து ரோஜா மலரை சாகுபடி செய்கிறார்கள்.

கடந்தாண்டில், உலக நாடுகளுக்கு 1 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடும் வெயில் போன்ற காரணங்களால் இந்தாண்டு ரோஜா மலர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகக் கூறும் விவசாயிகள், தற்போது, சுமார் 70 லட்சம் மலர்கள் மட்டுமே உற்பத்தியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
ரோஜா மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், 15 ரூபாய் வரை கிடைப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள், உள்ளூர் சந்தையிலேயே ஒரு மலருக்கு 12 ரூபாய் வரை கிடைப்பதால், இங்கேயே மலர்களை விற்பனை செய்துவருவதாக தெரிவிக்கிறார்கள். சீனாவில் இருந்து ரோஜா இறக்குமதி தடைபட்டுள்ளதால், உள்ளூர் மலர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்பு நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Exit mobile version