சமூகநலத்துறை சார்பில் சுமார் 96 ஆயிரம் பயனாளிகளுக்கு 726 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2020-21-ம் நிதியாண்டிற்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அதன்படி, 95 ஆயிரத்து 739 பயனாளிகளுக்கு 726 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிதியுதவியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 7 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
தொடர்ந்து மூன்றாம் பாலினர் தையற் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் 4 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கிய முதலமைச்சர், மூன்றாம் பாலினருக்கான பிரத்யேக கைபேசி செயலியையும் துவக்கி வைத்தார். சமூகநலத்துறையில் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மயிலாடுதுறை நாராயணப்பெருமாள் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியையும், சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்திற்கு கட்டப்படவுள்ள மதில்சுவருக்கான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த முதலமைச்சர், அரசு தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட 31 பேருக்கு பணி நியமன ஆணையையும் வழங்கினார். இந்த நிழச்சியின் போது, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகூர் தர்கா குளத்தில் நான்குபுறத் தடுப்பு சுவர் கட்டும் பணியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். 4 கோடியே 34 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டும் பணியை காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், நிலோபர் கபில், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு தகவல் ஆணையக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 27 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை காணொலி மூலம் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.