சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இணையதளம்: மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும், மத்திய அரசின் காதி கிராஃப்ட் நிறுவனமும் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய அலிபாபா, அமேசான் இணைய விற்பனைத் தளங்களைப் போன்ற புதிய விற்பனைத் தளத்தை இந்திய அரசு தொடங்க உள்ளது. அது குறித்து இந்த சிறப்புத் தொகுப்பில் பார்ப்போம்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சி என்பது தேச வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் மத்திய அரசின் காதி கிராஃப்ட் உற்பத்தியாளர்களும் தரமான பொருட்களை உருவாக்கினாலும், அவற்றால் சந்தையில் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை, இதன் காரணம் சந்தைப்படுத்துதலில் உள்ள குளறுபடிகள்தான்.

இதனால் விரைவில் இணையதளம் மூலம் இந்த உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இன்று நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘அலிபாபா, அமேசான் போன்ற இணைய விற்பனைத் தளங்களைப் போன்ற ஒரு தளம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் உற்பத்திப் பொருட்களுக்கும், காதி கிராஃப்டின் உற்பத்திப் பொருட்களுக்கும் என பிரத்யேகமாக இயக்கப்பட உள்ளது’ – என்று தெரிவித்தார்.

இப்படி ஒரு இணையதளம் உருவாக்கப்படும் போது, எளிய இந்தியத் தொழிலாளிகளின் உற்பத்திப் பொருள்கள் தேசிய அளவிலான கவனத்தைப் பெறுவதோடு, அவை சர்வதேச சந்தையிலும் போட்டியிட ஆரம்பிக்கும். உதாரணமாக, இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் சேகரிக்கப்படும் தேனானது அமெரிக்காவில் உள்ள ஒருவரால் வாங்கப்பட இது வாய்ப்பை ஏற்படுத்தும். அப்போது தரமான உள்ளூர் பொருட்கள் உலக அளவிலான பிராண்டுகளோடு போட்டி போடும். இது இந்திய தொழில்துறையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 50% தொகையை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் மூலம் எட்ட வேண்டும், இதன் வாயிலாக 15 கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் – என்ற மிகப்பெரிய இலக்கை எட்டுவதும் இந்தத் திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது. 

மத்திய அமைச்சரின் நிதின் கட்கரியின் இந்த அறிவிப்பை, நாடெங்கும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டுவரும் பலரும் வரவேற்று வருகின்றனர். 

 
 
Exit mobile version