விழிப்புடன் இருப்போம் ; எய்ட்ஸ் நோயை ஒழிப்போம்

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 1ஆம் தேதி, உலக எய்ட்ஸ் தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளைக் கொண்டு, எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வு, உரிமைகளை அனைவரும் மதிக்க வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே, உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், ”உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பை பகிர்ந்து கொள்ளுதல்” என்ற மையக் கருத்தை, 2020 உலக எய்ட்ஸ் தினம் கருப்பொருளாக கொண்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக, 67 மீட்டர் உயரமுள்ள ஆணுறை வைக்கப்பட்டது. இதேபோல், 2007 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே, எய்ட்ஸ் குறியீடான சிகப்பு நாடா பெரிய அளவில் தொங்கவிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் அஞ்சல் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க துணை இயக்குனர்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் எச்.ஐ.வி பாதிப்பு 2019ல் 0.38 சதவீதத்திலிருந்து, 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மூவாயிரத்து 161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மையங்கள் மூலம், எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version