கொரோனாவிற்கு எதிரான போரில் கடைசி கட்ட முயற்சிதான் ஊரடங்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், கொரோனாவிற்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருவதாக தெரிவித்தார்.
கடந்தாண்டு இருந்த மோசமான சூழ்நிலை, கொரோனா இரண்டாம் அலையில் இல்லை எனக் கூறிய பிரதமர் மோடி, பொருளாதாரம் பாதிக்காத வகையில் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய சூழலில் அரசு இருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீளவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், நாட்டு மக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கிற்கான தேவை இருக்காது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி மற்றும் பொருளாதாரம் குறித்து வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட பிரதமர், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இக்கட்டான இந்த தருணத்தில் மக்கள் பொறுமையை மட்டும் இழந்து விடக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், ஆக்சிஜன் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.
மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு ஆலோசனை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், அதன் மூலம் மருந்துகளின் விநியோகம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகிலேயே மலிவு விலையில் தடுப்பூசி உற்பத்தி செய்தது இந்தியா தான் என்றும், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது மருந்து தயாரிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி மக்களை எளிதில் சென்றடைய அதன் உற்பத்தியில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சம் கொள்ளாமல், வசிக்கும் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், முடிந்த அளவு மாநில அரசுகள் ஊரடங்கை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், கொரோனாவிற்கு எதிரான போரில் கடைசி கட்ட முயற்சி ஊரடங்கு தான் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.