மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்பதை எதிர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த எண்ணூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு, ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மொழி தொடர்பான போராட்டம் 80 ஆண்டுகால போராட்டம் என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கடைப்பிடித்த கொள்கையைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைபிடிப்பதாகவும் கூறினார். மொழி திணிப்பைத் தான் எதிர்க்கிறோமே தவிர மொழி கற்றுக் கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என பாஜக தலைவர் முருகனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பதில் அளித்தார்.