உத்திரபிரதேச மாநில காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க கட்சிகளாக இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய 2 கட்சிகளும் காங்கிரசை சேர்க்க மறுத்து விட்டன. இந்த நிலையில் அதிரடி திருப்பமாக பிரியங்கா காந்திக்கு கட்சியில் புதிய பொறுப்பை கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசதின் கிழக்குப் பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டிருப்பது பாஜகவுக்கு மேலும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று மேற்கு பகுதிக்கு ஜோதிராதித்ய சிந்தியா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே பிரியங்கா காந்தி நியமனத்தை கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள், இந்திரா திரும்பினார் என்ற போஸ்டர்களை உத்திரபிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டியுள்ளனர்.
இந்திரா சாயலில் இருக்கும் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்று கட்சி தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரியங்கா காந்தி நியமனத்தால் தங்களுக்கு எந்த சவாலும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சி என்று நிரூபித்துள்ளதாக கூறினார்.