ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. படித்தவர்கள் கூட அலட்சியத்தால் ஆன்லைன் மோசடிகளுக்கு இலக்காகின்றனர். இந்த மோசடிகளில் இருந்து மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பது எப்படி?
கடந்த ஜூலை மாதம் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆன்லைன் மோசடிகளால் கடந்த 2018-2019 நிதியாண்டில் மட்டும் தமிழக மக்கள் 56 கோடி ரூபாயை இழந்து உள்ளனர். 2016-2017 நிதியாண்டில் இது 4 கோடியாக இருந்த நிலையில், 3 ஆண்டுகளில் இழப்பு விகிதம் 14 மடங்குகளாக அதிகரித்து உள்ளது.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து தங்கள் பணத்தைப் பாதுகாக்க மக்கள் செய்ய வேண்டியவை
என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்…
மொபைல் போன்கள் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் அதற்கென
வங்கிகள் கொடுத்துள்ள செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முன்னறிமுகம் இல்லாத செயலிகள் மூலமும், தனியார் செயலிகள் மூலமும் பணப்
பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவே கூடாது.
மொபைல் போன்களில் பணப் பரிமாற்ற செயலிகளைப் பயன்படுத்தும் போது அவற்றுக்கு கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டும். அந்த பாஸ்வேர்டுகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும்.
பணப் பரிவர்ததனைக்கு ஒரு செயலியைப் பயன்படுத்தும்போது, பரிவர்த்தனை முடிந்த பின்னர் அந்த செயலியில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டும். அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.
பாதுகாப்பான இணைய இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது.
பணப்பரிவர்த்தனை செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் புதிய பாதுகாப்பு அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும், அப்போதுதான் புதிய வகை திருட்டுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவற்றை மக்கள் செய்யும் போது ஆன்லைன் மோசடிகள் பெருமளவில் குறையும்.