மதுரையில் குற்றங்களை தடுக்க புதிய வாட்ஸ்-ஆப் நம்பரை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை வழக்குகளில் கைதான 23 நபர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், பொதுமக்கள் குற்றச் செயல்கள் மற்றும் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் 83000-21100 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணை வெளியிட்டுள்ள அவர் இந்த எண்ணிற்கு பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த குற்ற செயல்களை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என உறுதியளித்துள்ள அவர், இதன் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.