ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் எடுத்து செல்வதற்கான பணி 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் சென்னைக்கு நீர் எடுத்து செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதையடுத்து நீர் கிடைக்கும் மேட்டுசக்கரகுப்பத்திலிருந்து, ஜோலார்பேட்டை வரை குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டு போகும் திட்டத்தில் 80 சதவீதப் பணிகள் முடிந்திருப்பதாகவும், வரும் 10ஆம் தேதிக்குள் சென்னைக்கு நீர் கொண்டு செல்லப்படும் எனவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.