தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா தொடர் வலியுறுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு அளித்துவரும் ஆதரவை நிறுத்திக்கொள்ளாவிட்டால், இந்தியாவில் இருந்து 3 நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை நிறுத்துவதை தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகளை இந்தியா துவங்கியுள்ளதாக தெரிவித்தார். அந்த நதிகளின் நீர் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான உறவுடனும் நட்புடனும் இருக்க வேண்டும் என்பதே நீர் ஒப்பந்தத்திற்கான அடிப்படை என்று தெரிவித்துள்ள அவர், இது மறைந்துள்ள நிலையில், ஒப்பந்தத்தை நாம் பின்பற்ற தேவையில்லை என்று மேலும் கூறினார்.