ஈரோட்டில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியது

ஈரோட்டில், குண்டேரிப்பள்ளம் அணை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கோடைக்காலங்களில் தண்ணீருக்காக தினமும் அல்லல்பட்டு வந்த மக்களின் துயர் துடைக்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் ஊராட்சியில் கொங்கர்பாளையம், புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை, கோவிலூர், மோதூர் உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் வருகின்றன. கோடைக்காலத்தின் போது, இந்த கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை மக்களை வெகுவாக வாட்டி வந்தது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண, ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பின்னர், இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு சென்றவுடன், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டேரிப்பள்ளம் அணை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமெடுத்தன. இதன்மூலம், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வசதி, தற்போது சாத்தியமாகி இருக்கிறது.

குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில், கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தினமும் ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. நீண்ட காலமாக நீடித்துவந்த, துயரை அரசு முழு அக்கறையுடன் போக்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

Exit mobile version