சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி வரையிலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கால்வாய் பராமரிப்பு பணி மற்றும் தொடர் மழை காரணமாக காலதாமதமாக கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 31 வரை 137 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்ததை அடுத்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
தண்ணீரை திறந்த பின்பு அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கால்வாய் பாசனம் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 24-ம் தேதிக்கு பிறகு விருப்பமான பள்ளியில் சேர வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.