கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் வந்து சேர்ந்ததையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் பூஜைகள் செய்து மகிழ்ந்தனர்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணையை வந்தடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து பல பகுதிகளுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்து சேர்ந்ததை அடுத்து அங்கிருந்து வீராணம் ஏரிக்காக வடவாறு ராஜன் வாய்க்காலில் நொடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் வீராணம் ஏரிக்கு நேற்று வந்து சேர்ந்தது.

இந்த நீரானது காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள உத்திரசோலை என்ற இடத்திற்கு வந்தபோது, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதுத் தண்ணீரை வணங்கி, பூஜைகள் செய்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அப்போது, உரிய நேரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட்ட தமிழக அரசுக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்குக் குடிநீர் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version