முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 112 அடி அளவிலேயே உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது நீர் வரத்து முற்றிலும் நின்றது. தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான வைகையின் நீர்மட்டம் 28 அடிக்கும் கீழே குறைந்ததால் அம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 150 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வைகை அணையை வந்து சேர இன்னும் ஓரிரண்டு நாட்கள் ஆகும் என்பதால் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 60 கன அடி நீர் மட்டும் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.