நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து 150 கன அடி முதல் 250 கனஅடியாக இருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர் மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.03 அடியாகவும், நீர் இருப்பு 5.2 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.