அரியலூரில் பொதுமக்களின் பங்களிப்புடன் நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சாத்தமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வினய் கலந்துக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, பாரம்பரியமிக்க மற்றும் இதர நீர் நிலைகள், ஏரிகள் புணரமைத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வினய், இத்திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 106 சிறு பாசன ஏரிகள் மற்றும் 872 ஊரணிகள், குட்டைகள் ஆகியவைகளை, சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.