மேட்டூர் அணை நீர்மட்டம் 121 அடியை நெருங்கியுள்ள நிலையில், நீர் வரத்து 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 67 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கனமழை காரணமாக கர்நாடகா அணைகள், நிரம்பி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 67 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120.94 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 900 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. உபரிநீர் முழுவதும் அணையின் 16-ம் கண் உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்படுறது. இது ரம்மியமாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை காண சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மேட்டூர் அணைக்கு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது