சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட, கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ஆர் ஆகியோர் கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் செய்தனர். அதில் ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் படி இரண்டு தவணையாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தவணையாக செப்டம்பர் மாதம் 22ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அக்டோபர் 31ம் தேதியோடு நிறுத்தப்பட்டது. இதுவரை 1.604 டி.எம்.சி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. கூடுதலாக தண்ணீர் திறக்க தமிழக அரசு, ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.