அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான பழைய சுரங்கங்களில் ராட்சச மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
செந்துறைக்கு உட்பட்ட ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான பழமையான சுரங்கத்தை மூடாமல் அதில் உள்ள ஊற்றுத் தண்ணீரை ராட்சச மோட்டாரை கொண்டு உறிஞ்சி ஆலை பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் முள்ளுக்குறிச்சி, தெத்தேரி கிராம மக்களின் குடிநீர்த் தேவைக்குக்கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
அதனால் ஆண்டாகுளம் ஏரியில் இயங்கும் போர்வெல் மின்விசை பம்புகளை அப்புறப்படுத்தவும் காலாவதியான சுரங்கத்தை மூடி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய சுரங்கங்கள் மூடப்பட்டால்தான் வெள்ளாற்றில் புதிதாக கட்டப்படும் தடுப்பணை பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.