ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ள நிலையில், ஆயிரத்து 100 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாஷிங்டன் நகரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, மேயர் முரில் பவுசர் தெரிவித்துள்ளார். மார்ச் 31-ஆம் தேதி வரை மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் விழாக்களை நடத்த வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து விமான சேவையும், ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் இதில் பிரிட்டனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக, டாம் ஹேங்க்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.