முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்?
இதுநாள் வரை எனது தனிப்பட்ட வாழ்வில் பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள முத்தையா முரளிதரன் என்னைப் பற்றி திரைப்படம் எடுக்கப் போவதாக அணுகிய போது முதலில் தயங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
30வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்ற போரில் மலையகத் தமிழர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும் ஏழு வயதில் தனது தந்தை வெட்டப்பட்டார் என்றும் தெரிவித்தார். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நான் பேசிய பல கருத்துக்கள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் இத்தகைய அரசியல் எதிர்ப்பு எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முரளிதரன் என் பள்ளிப்பருவத்தில் ஒன்றாக விளையாடிய நண்பன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலை மனதில் வைத்தே போர் முடிவுற்றது குறித்து கருத்து தெரிவித்து இருந்தாக குறிப்பிட்ட முரளிதரன் ஒருபோதும் அப்பாவி மக்களின் படுகொலையை ஆதரிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.
தான் ஒரு மலையகத் தமிழனாக இருந்தாலும், ஈழத் தமிழர்களுக்கு அதிக உதவிகளை செய்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்து இருந்தால் இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்திருப்பேன் என குறிப்பிட்டுள்ள முரளிதரன் இலங்கைத் தமிழனாக பிறந்தது தவறா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அறியாமையாலும் அரசியலுக்காகவும் தமிழர்களுக்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது எனவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.