ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் சாலையோரம் நிற்கும் வன விலங்களை தொந்தரவு செய்யாமல் பயணம் மேற்கொள்ளுமாறு வாகன ஓட்டிகளை வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தாளவாடி, தலமலை, ஆசனூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் வனத்தில் வசிக்கும் விலங்குகள் சாலையோரக் குட்டைகளில் தேங்கி நிற்கும் நீரை அருந்துவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன.
அவ்வாறு வரும் விலங்குகளை போட்டோ எடுக்கும் வாகன ஓட்டிகள் அவைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வண்ணம் கூச்சலிடுகின்றனர். இது போன்று சத்தங்கள் எழுப்புவதால் வன விலங்குகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறையினர், வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக செல்லும்படி வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.