வாணியம்பாடியில் சுற்றித்திரியும் சிறுத்தை : பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை மற்றும் காவல்துறையினர் விடிய விடிய கண்காணித்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாகாலேரி என்ற பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து அலமேலு, பாரதி உள்ளிட்ட சிலரை கடித்து குதறியது.

இதையடுத்து அப்பகுதியினர் சிறுத்தையை விரட்டியடிக்க ஒன்று திரண்டனர். நாகாலேரி பகுதியில் உள்ள ஏரியில் முள்புதரில் பதுங்கிய சிறுத்தையை தேடிச்சென்ற போது மறைந்திருந்த சிறுத்தை திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கி பாய்ந்து மேலும் சிலரை கடித்தது. இதனால் ஒட்டு மொத்த கூட்டமும் தெறித்து ஓடியது.

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க திருப்பத்தூர் வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இரவாகி விட்டதால் சிறுத்தையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஒசூர் கால்நடை மருத்துவ மையத்தின் டாக்டர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

ஏரி மற்றும் விவசாய நிலங்களில் இருக்கும் அடந்த புதர்களில் சிறுத்தை மறைந்துள்ளதால் அதை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சிக்கனாங்குப்பம், அழிஞ்சிகுளம், ஈச்சங்கால்,உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு, யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது.

Exit mobile version