வரும் 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரும் 6-ம் தேதி தெற்கு மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். இதனால் 6, 7 மற்றும் 8-ம் தேதிகளில் பருவ மழை வலுவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கனமழை காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் மணிமுத்தாறில் 29 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில் நேற்றும் அங்கு 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.