கெத்து காட்டியதால் தீர்த்து கட்டினோம் வியாசர்பாடி கல்லூரி மாணவன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம். சென்னை வியசார்பாடி சின்னதம்பி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில், அரும்பாக்கம் தனியார் கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்து வந்தார். இவரது தாய் விநாயகி, காசிமேட்டில் இருந்து மீன்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தம்முடன் மீன் விற்பனை செய்யும் பக்கத்து தெருவை சேர்ந்த அம்சா என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து வருமாறு பிரசாந்திடம், அவரது தாய் கூறியுள்ளார். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணியளவில் சுந்தரம், பவர் லேன் பிரதான சாலையில் அம்சாவை அழைத்து வருவதற்காக சென்றபோது மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்காளால் தாக்கப்பட்டார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாந்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிரசாந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, வியாசர்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். உதவி ஆய்வாளர்கள் புருசோத்தமன், பிரேம் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், மாத்தூரை அடுத்துள்ள மஞ்சம்பாக்கத்தில் தனி குடிசை அமைத்து தங்கி இருந்த ஐந்து பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் வியாசர்பாடி சுந்தரம் பவர் லேன் பகுதியைச் சேர்ந்த பால சந்துரு, சூர்ய பிரகாஷ், சுதாகர், பரத், சாக்ரடிஸ், என்பது தெரியவந்தது. பிரசாந்த் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதால் தாம் தான் ஏரியாவில் பெரிய ஆள் என கூறிக்கொண்டு, அடிக்கடி அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்தப் பகுதி இளைஞர்கள் கும்பலாக நின்று பேசினால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதை பொறுக்க முடியாத அந்தப் பகுதி இளைஞர்கள் 5 பேரும் சேர்ந்து ஒரு வாரமாக பிரசாந்தை தீர்த்துக்கட்ட முயற்சி செய்துள்ளனர். இறுதியில் தினமும் பிரசாந்த் இரவு மீன் கடைக்கு செல்வதற்காக அம்சாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு செல்வதை அறிந்து திட்டம்போட்டு சம்பவத்தன்று பழி தீர்த்துள்ளனர். ஏரியாவில் யார் பெரிய ஆள் என்ற தகராறில் பிரசாந்த் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.