வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த 25-ம் தேதி முதல் 30ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற்ற சோதனையில் அந்த நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் பெயர்களில் கணக்குப் பரிவர்த்தனை நடைபெற்றதும் வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இதேபோல், வெளிநாடுகளில் 8 சுரங்கங்கள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதல் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர், அந்த நிறுவனத்தில் இருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.