இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 269ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானாவில் 24 பேரும், ராஜஸ்தானில் 21 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் மூவருக்கும், ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப், லடாக், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 434 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், 6 ஆயிரத்து 960 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 78 ஆயிரத்து 291 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே, ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஒமிக்ரான் பரவலை தடுப்பது தொடர்பாகவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி மாலை 6.30 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version